மேற்கு ஆபிரிக்காவின் நைஜர் நாட்டில் சிறுவர் பாடசாலை ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 20 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நைஜர் நாட்டின் நியாமி என்ற நகரில் உள்ள சிறுவர் பாடசாலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து நேரிட்டது. மிகச் சிறிய வகுப்பறைகளுக்குள் படித்துக்கொண்டிருந்த சிறுவர்களை உடனடியாக வெளியேற்ற முடியாத நிலையில், ஏராளமான சிறுவர்களுக்கு தீ காயம் ஏற்பட்டது. இதில் 20 சிறுவர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்ட அந்நாட்டு பிரதமர் மகாமது, குழந்தைகளை பறிகொடுத்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், கவனக்குறைவால் இந்த விபத்து நேரிட்டிருந்தால் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.