இந்து மத புராணங்களின் படி மகிஷாசூரனை வதம் செய்ய 3 தேவிகள், ஒன்றாக தவமிருந்து வதம் செய்த நாள் தான் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் கொடுமை அழிந்து நன்மை பிறக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அன்று புராணங்களில் படி தேவிகள் மகிஷராசூரனை கொல்ல ஆயுதங்களை சுத்தம் செய்து பூஜை செய்தது போல தொழில் செய்பவர்கள் தங்கள் இடங்களை சுத்தம் செய்து தாங்கள் பயன்படுத்தும் ஆயுதங்களையும் சுத்தம் செய்து பூஜை செய்வார்கள். இப்படியாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த வதம் செய்யும் நிகழ்ச்சி இந்தியாவில் வடநாட்டில் ராமன் ராவணனை வதம் செய்த நாளாக கொண்டாடுகின்றனர். வடநாட்டில் இந்த பண்டிகைக்கு தசரா என பெயரிட்டு கொண்டாடுகின்றனர்.
நவராத்திரியின் முக்கிய அம்சமே கொலுதான். படிப்படியாக இறைவனின் அருள் நிறைந்த பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடுகிறோம். இதற்கு ஒரு புராண கதையும் உள்ளது. ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் வடித்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உருவாக்கினான் என புராணங்கள் கூறுகின்றன.
நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியாலும் அந்நாளை விஜயதசமி என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக இந்து மக்களிடையே கொண்டாடப்படும்.
ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை மரத்தை வெட்டுவது வழமை. மஹிஷாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்துள்ளான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி அழைக்கப்படுகிறது. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை அதனால் செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக கோயில்களில் வாழை வெட்டுவது வழக்கம்.
இந்நன்னாளில் தேவியை பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் தந்து அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்