web log free
December 04, 2024

முன்னாள் துணை ஜனாதிபதி மீது பாலியல் புகார்

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் எழுப்பி இருப்பது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், ஜோ பிடென் (வயது 76). இவர் 1973-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 35 ஆண்டு காலம் செனட் சபை எம்.பி. பதவி வகித்தவர்.

ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை துணை ஜனாதிபதி பதவி வகித்தார்.

அடுத்த ஆண்டு அங்கு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்க பரிசீலித்து வருகிறார்.

இந்த நிலையில், நெவேடா மாகாண சட்டசபையின் முன்னாள் உறுப்பினரான லூசி புளோரஸ் (39) என்ற பெண் சமீபத்தில் ஜோ பிடென் மீது பரபரப்பு பாலியல் புகார் எழுப்பினார். இது குறித்து அவர் அங்கு வெளிவருகிற ‘தி கட்’ என்ற பத்திரிகையில் எழுதினார்.

அதில் அவர், “நான் 2014-ம் ஆண்டு, நெவேடா மாகாணத்தின் துணை கவர்னர் பதவிக் கான தேர்தலில் போட்டியிட்டேன். எனக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, ஜோ பிடென் வந்தார்.

நான் மேடையில் ஏறுவதற்கு தயாராகிக்கொண்டிருந்தேன். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், ஜோ பிடென் எனது பின்னால் வந்து, என் தோள்கள் மீது தனது கைகளை வைத்து அழுத்தினார். என் தலையை முகர்ந்தார். என் பின்தலையில் முத்தமிட்டார்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக ஜோ பிடென் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் எழுப்பி இருக்கிறார். இந்தப் பெண்ணின் பெயர் எமி லேப்போஸ் (43). இவர், ஜோ பிடெனின் முன்னாள் உதவியாளர் ஆவார்.

இவர் ஜோ பிடெனின் தொல்லை பற்றி கூறும்போது, “2009-ம் ஆண்டு, கனெக்டிகட் மாகாணத்தின் ஹார்ட்போர்டு நகரில் ஒரு தனியார் இல்லத்தில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அந்த இல்லத்தின் சமையல் கூடத்தில் நாங்கள் இருந்தோம். உதவியாளர்களான எங்களுக்கு நன்றி கூறுவதற்காக ஜோ பிடென் அங்கு வந்தார். ஆனால் அவர் தனது இரு கைகளையும் என் முகத்தில் வைத்து அழுத்தி, அவரது மூக்கால் என் மூக்கை உரசி பாலியல் தொல்லை கொடுத்தார்” என குறிப்பிட்டார்.

இந்த புகாரை ஜோ பிடென் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “என் பொதுவாழ்வில் எத்தனையோ பேருடன் கை குலுக்கி உள்ளேன். எத்தனையோ பேரை தழுவி இருக்கிறேன். என் அன்பினை, ஆதரவை, ஆறுதலை வெளிப்படுத்தி இருக்கிறேன். ஆனால் எந்தப் பெண்ணிடமும் இப்படி தவறாக நடந்து கொண்டது கிடையாது” என்று குறிப்பிட்டார்.

இதையொட்டி ஜோ பிடெனின் இன்னொரு முன்னாள் உதவியாளரான சிந்தியா ஹோகன் என்ற பெண் கூறுகையில், “அவர் எங்களை மரியாதையுடன் நடத்தினார். அதையே மற்றவர்களும் பின்பற்றுமாறு வலியுறுத்தினார்” என்று குறிப்பிட்டார்.

இருப்பினும் அடுத்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட எண்ணியுள்ள நிலையில், ஜோ பிடென் இந்த குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd