web log free
November 24, 2024

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறு உக்ரேன் ஜனாதிபதி மக்களுக்கு அழைப்பு

உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷியா, இன்று அதிகாலையில் உக்ரைன் மீது போரை தொடங்கியது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரை முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது.

உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லும்படி ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் உக்ரைன் படைகள் பின்வாங்காமல் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளன. ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக கூறி உள்ளார். மேலும் ரஷியா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருக்கும் அனைத்து மக்களும் முன்வர வேண்டும். ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும். ரஷ்யர்கள் வெளியே வந்து போருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd