web log free
December 22, 2024

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் வெடிக்க இதுவே காரணம்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 3 நாட்கள் ஆகிறது. தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு உலக நாடுகளுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்து கதறி அழுதது. இருப்பினும் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா கூட அந்நாட்டுக்கு பெரிதாக உதவவில்லை.

இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுக் கொண்டே செல்லும் நிலைதான் தற்போது வரையில் உள்ளது.

ஒன்றுபட்டிருந்த சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்து சென்ற பிறகு அந்நாட்டுக்கும், ரஷியாவுக்கும் இடையே இருந்து வந்த மனக்கசப்புகளே தற்போது மோதலாக மாறி இருக்கின்றன.

இதனால் உக்ரைனில் போர் உக்கிரமாக உள்ளது. ரஷிய படைகளின் முன்னால் உக்ரைன் படையால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனால் உக்ரைனை ரஷியா முழுமையாக கைப்பற்றும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த போருக்கு முக்கிய காரணமாக கடல்வழி வர்த்தகமும், அதற்கு உறுதுணையாக இருக்கும் கருங்கடல் துறைமுகமும் அமைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த வரலாற்று பின்னணியில் ரஷியாவின் பாதுகாப்பும் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே ரஷியா உக்ரைன் மீது மிகவும் உக்கிரமாக போர் தொடுத்துள்ளது.

பறந்து விரிந்த கடல் பரப்பில் செவஸ்டபுல் துறைமுகத்துக்கு ரஷியா ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தருகிறது? அதன் பின்னணி என்ன? என்பதை பார்க்கலாம்.

ரஷியாவின் நிலப்பரப்பு என்பது மிகவும் பெரியதாகும். 17 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அந்நாட்டின் நிலப்பரப்பு பறந்து விரிந்து கிடக்கிறது. 36 ஆயிரம் கிலோ மீட்டர் கடலோரத்தையும் அந்த நாடு பெற்றிருக்கிறது.

இப்படி ரஷிய கடல் பரப்பு மிக நீளமாக இருந்த போதிலும் அதனை ரஷியாவால் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையே இருந்து வருகிறது. ரஷியாவின் கடல் பரப்பு நீளம் வடதுருவம் வரை பரவி இருப்பதால் ஆண்டு முழுவதும் கடல் உரைந்தே காணப்படுகிறது.

இதனால் இந்த கடல் பரப்புகள் ரஷியாவின் வணிக பயன்பாட்டுக்கும் எந்த வகையிலும் பயன் அற்றே உள்ளது.

கடல் வணிகத்துக்கும் தெற்கு பகுதிகளுக்கும் பண்டமாற்று தொடர்புகளுக்கும் உக்ரைனில் உள்ள செபஸ்டபுல் துறைமுகமே முழுமையாக கைகொடுத்து வருகிறது.

உருக்குலைந்த ரஷியாவின் வீழ்ச்சிக்கு பிறகு அருகில் உள்ள உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் ரஷியாவுடன் நல்ல தொடர்பில் உள்ளன. ஆனால் ஐரோப்பிய பகுதிகளுக்கு அருகில் உள்ள ருமேனியா, லித்து வேனியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய மேலைநாடுகள் மற்றும் நேட்டோவுடன் தொடர்பில் உள்ளன.

இந்த நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதி ரஷியாவையும், மேற்கு பகுதி ஐரோப்பா பகுதிகளையும் சார்ந்து செயல்பட்டு வருகிறது.

உக்ரைன் நாடு புவியியல் ரீதியாக தெற்கு பகுதியில் உள்ள கிரீமியாவில் செபஸ்டபுல் துறைமுகத்தை பெற்றுள்ளது. ரஷியா-உக்ரைன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அந்த துறைமுகத்தை ரஷியா குத்தகைக்கு எடுத்துள்ளது.

அதே நேரத்தில் உக்ரைனின் இறையாண்மையை எப்போதும் பாதுகாப்போம் என்று ரஷியா உறுதி அளித்து இருந்தது.

இந்த நிலையில்தான் உக்ரைன், ஐரோப்பா மற்றும் நேட்டோ நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்காக காய்களை நகர்த்தியது. அது போன்று நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணையக்கூடாது என்று ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆனால் ரஷியாவின் பேச்சை கேட்காமல் உக்ரைன் நேட்டோ நாடுகளுடன் இணைவதில் உறுதியாக இருந்தது. அதற்கான வழிமுறைகளையும் அது கையாண்டது.

இப்படி நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் நாடு சேர்ந்து விட்டதால் நேட்டோ படைகள் உக்ரைன் துறைமுகம் பகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழல் ஏற்பட்டது.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கடல்வழி வணிகத்துக்கு பெரும் துணையாக இருக்கும் செபஸ்டபுல் துறைமுகத்தை இழக்க நேரிடும் என்கிற கவலை ரஷியாவுக்கு ஏற்பட்டது.

அதே நேரத்தில் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று ரஷியா கருதியது. இதன் காரணமாகவே உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது.

ரஷியாவுடன் உக்ரைன் மோதல் போக்கை கடைபிடிப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2013-ம் ஆண்டு உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக முனைப்பு காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், உக்ரைனின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையிலும் ரஷிய அதிபர் புதின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அப்போதுதான் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த கிரீமியாவை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து செபஸ்டபுல் துறைமுகத்தையும் தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தது.

அப்போதே புதின் உக்ரைனை எச்சரிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். அளவுக்கு மீறி ஒரு விசயத்தில் கால்பதித்தால் அது உங்களையே திருப்பி தாக்கும் என்று அவர் எச்சரித்து இருந்தார். அதுதான் இப்போது உக்ரைன் விவகாரத்தில் நடந்துள்ளது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

இதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட உக்ரைன் ஆதரவு நாட்டினர் தங்கள் எல்லை பகுதிகளுக்குள் வராமல் ரஷியா தங்களை உறுதியாக பாதுகாத்துக் கொள்ளவே போரை நடத்தி வருவதாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

 

Last modified on Saturday, 26 February 2022 08:04
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd