web log free
March 28, 2024

சவுதி எண்ணெய் கிடங்கு மீது ஏவுகணை தாக்குதல்

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது யேமனின் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) ஆளில்லா விமானத்தின் ஊடாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்த தாக்குதலின் போது எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை.


இதே எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது ஹெளதி கிளர்ச்சியாளர்கள் சில தினங்களுக்கு முன்பு தாக்குதல்களை நடத்திய நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கும் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ கார் பந்தயத்தை தடுக்கும் விதமாக மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான வடக்கு ஜெட்டா எண்ணெய்க் கிடங்கு, மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் யாத்ரீகர்கள் வந்திறங்கும் ஜெட்டா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.


இந்த எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் டீசல், கேசோலின், ஜெட் விமான எரிபொருள் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டுள்ளன.


இந்தத் தாக்குதல் தொடர்பாக சவுதி அரேபியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிளர்ச்சியாளர்கள் நகரில் உள்ள தண்ணீர் தொட்டியை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆனால், தாக்குதலில் சில வீடுகளும், வாகனங்களும் சேதமடைந்தன.


மற்றொரு தாக்குதல், யேமன் எல்லைக்கு அருகே சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் துணை மின் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


யேமனில் ஜனாதிபதி மன்சூர் ஹாதி தலைமையிலான அரச படைகளுக்கும், ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது.


இதில் யேமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் அங்கம் வகிக்கிறது. இதனால் ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.