'தமிழ் இனத்தை ஜாதி, மதத்தால் பிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர்' என இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருவான்மியூரில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சிறுபான்மை இயக்கத்திற்கும், தி.மு.க.,விற்கும் காலம் காலமாக உள்ள தொடர்பு தொடரும். இதில், கலகத்தையோ, பிரிவையோ ஏற்படுத்த முடியாது. எதிர்கட்சியாக இருந்த போதே, இஸ்லாமியர்களுக்காக தி.மு.க., குரல் கொடுத்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அவர்களுக்காக, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளது.
மதம் என்பதும், சமய நம்பிக்கை என்பதும், அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அனைவரும் தமிழர் என்ற ஒற்றுமை உணர்வுடன் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் கிடைக்கும் நன்மைகள் அதிகம்; பலமும் அதிகம்.
தமிழ் இனத்தை ஜாதி, மதத்தால் பிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். அப்படி செய்தால், தமிழினத்தை அழிக்க முடியும் என்று நினைக்கின்றனர். நம்மை பிளவுப்படுத்துவதன் வாயிலாக, நம் வளர்ச்சியை தடுக்கப் பார்க்கின்றனர். அதற்கு தமிழினம் பலியாகக் கூடாது. இதற்கு பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து, தெளிந்து புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் அமைதி நிலவ வேண்டும். அமைதியான, நிம்மதியான நாடு தான் அனைத்து விதமான வளர்ச்சியையும் பெற முடியும். அத்தகைய வளர்ச்சிக்கான சூழலை, ஓராண்டு காலத்தில் நம் அரசு உருவாக்கி உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.