web log free
December 04, 2024

ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி

போர்த்துக்கலில் ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பெண்கள் உள்பட 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்த்துக்கலின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவு மடெய்ரா. பிரபல சுற்றுலா தலமான இங்கு அயல்நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் மடெய்ராவின் தலைநகர் புஞ்சாலில் இருந்து, கடற்கரை நகரமான கனிகோவுக்கு ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. கனிகோவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் தறிகெட்டு ஓடிய பஸ், சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 18 பெண்கள் உள்பட 29 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மேலும் 27 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd