ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஒருபோதும் அமைச்சராக வர முடியாது என்றும் அவர்கள் குழந்தைகளை பெற்றெடுத்து நிம்மதியாக இருக்கட்டும் எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஆப்கானிஸ்தானை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தலிபான்கள் இடைக்கால அரசையும் நிறுவி அதற்கான அமைச்சரவை பட்டியலையும் வெளியிட்டனர். அதில் ஒரு பெண்ணுக்கு கூட வாய்ப்பு வழங்காதது சர்வதேச அளவில் விவாதத்திற்கு உள்ளானது
இந்நிலையில் தலிபான் செய்தித் தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷிமி ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் அமைச்சர்களாக ஆக முடியாது என்றும் பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அது அவர்களால் தாங்கமுடியாத சுமை என்றும் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் ஆட்சி நடைபெறும் என்றும் அதன்வழி வாழ்க்கை முறை ஒழுங்குபடுத்தப்படும் எனவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் தங்களின் அடிப்படைவாதத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை உலக நாடுகளுக்கு அவர்கள் உணர்த்தியுள்ளனர். கடந்தகாலத்தில் நடைபெற்ற தலிபான்கள் ஆட்சியை போல் இல்லாமல் இம்முறை எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் வழங்கப்படும் என தலிபான்கள் அறிவித்த நிலையில், பெண்களே இல்லாத வகையில் அமைச்சரவை முதல் அரசு நிர்வாகம் வரை ஆப்கனில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனிடையே பெண்களின் உரிமைகளை பறிக்காமல் நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் தலிபான்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பிரதமரும், தலிபான் அமைப்பின் தலைவருமான முல்லா ஹசன் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில், ஷரியத் சட்டம் குறித்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய சட்டங்களுடன் முரண்பாடு இல்லாத வகையில் உள்ள சர்வேத நாடுகளின் ஒப்பந்தங்கள், சட்டங்கள் உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், இனி வரும் நாட்களில் அரசு நிர்வாகம் மற்றும் வாழ்க்கை முறை ஷரியத் சட்டத்தின் படி ஒழுங்குபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.