கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்கு அண்மையிலிருந்து, வெடிக்கவைத்து தகர்த்தப்பட்ட நேரக் குண்டு பொருத்தப்பட்டிருந்த வேன் தொடர்பில் பல்வேறான தகவல்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு கிடைத்துள்ளன.
நேரக்குண்டை பொருத்தியவர் பாணந்துறை பிரதேசத்திலுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினராவார்.
பாதுகாப்பான வீடொன்றில் வைத்தே, அந்த நேரக்குண்டு பொருத்தப்பட்டுள்ளது.
அந்த வாகனத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னிருக்கை வரிசை, கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து இரகசிய பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் குண்டு வெடிக்கப்பட்டதன் பின்னர், ஒரு மணிநேரத்தில் வெடிக்கும் வகையிலேயே இந்த குண்டு பொருத்தப்பட்டுள்ளது.
எனினும், மின்னினைப்பு உரிய முறையில் விநியோகிக்கப்படாமையால் அந்த நேரக்குண்டு வெடிக்கவில்லை.
ஆடைகள் கழுவும் இயந்திரத்தின் டைமர் (நேரத்தை பதிவிடும் கருவி) பயன்படுத்தியே இந்த நேரக் குண்டு பொருத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேவாலயத்திலிருந்து சுமார் 80 மீற்றர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வேன், தேவாலயத்தில் குண்டு வெடித்ததன் பின்னர், அதனை பார்வையிடுவதற்காக வருகைதரும், மக்களை இலக்குவைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை பார்வையிடுவதற்கு வருகைதரும் மக்கள், பல மீற்றர் தூரத்துக்கு அப்பால் நின்றுக்கொள்வர். அவர்களை இலக்குவைத்தே இந்த நேரக்குண்டு தயாரிக்கப்பட்டிருக்கலாம்.
வெளியிலிருந்து வேனுக்கு உள்ளே பார்க்கும்போது, மிகவும் தெட்டத்தெளிவாக தெரியும்படி, 1000 ரூபாய் நோட்டுகள் போடப்பட்டிருந்தன. எனினும், அதன் ஒரு மூளையில், டவல் ஒன்றும் போடப்பட்டு போர்த்திவைக்கப்பட்டுள்ளது. 1000 ரூபாய் கட்டுகளை எடுப்பதற்காக, வேனின் கதவை திறக்கும் போதே, வெடிக்கும் வகையில் அந்த நேரக்குண்டு பொருத்தப்பட்டுள்ளது.
12.5 கிலோகிராம் நிறையை கொண்ட காஸ் சிலிண்டர்கள் மூன்றிலேயே இந்தக் குண்டு பொறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரக்குண்டு, குறித்த நேரத்தில் வெடித்திருந்தால், பாரிய அழிவுகள் ஏற்பட்டிருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொச்சிக்கடை குண்டுவெடிப்பு இடம்பெற்றதன் இரண்டு நாட்களுக்குப் பின்னர், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அந்த வேனை கண்டுப்பிடித்தனர். அதன்பின்னர், விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால், அந்த நேரக்குண்டு அவ்விடத்தில் வைத்தே செயலிழக்கச் செய்யப்பட்டது.