web log free
November 28, 2024

வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றம்

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் கிடைக்கப்பெற்றிருந்தது.

அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வாக்களிப்பதற்காக சபையில் பிரசன்னமாகவில்லை.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிதியமைச்சராக கடந்த நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெற்றதையடுத்து, இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு 22ஆம் திகதி பிற்பகல் நடைபெற்றது.

அங்கு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 84 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd