நேற்று மாலை பொரளை பொது மயானத்தில் காருக்குள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் ஐம்பத்திரண்டு வயதான வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டர் நேற்று பிற்பகல் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், மாலையில் இருந்து அவர் பதிலளிக்காததால், அவரது மனைவி ஜிபிஎஸ் மூலம் தொழிலதிபரை கண்டுபிடித்தபோது அவர் பொரளை கல்லறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காரின் சாரதி இருக்கையில் கட்டப்பட்டிருந்த ஷாஃப்டர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவரது கழுத்தில் கம்பியால் இறுக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கவலைக்கிடமான நிலையில் இருந்த வர்த்தகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த வர்த்தகரிடம் இருந்து பெறப்பட்ட மில்லியன் கணக்கான ரூபா பணத்தை மீளப் பெற்றுக்கொடுக்காத நபர் ஒருவருக்கு எதிராக குறித்த வர்த்தகர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.