போதைபொருள் வியாபாரிகளுடன் பொலிசாருக்கும், படைத்தரப்புக்கும் தொடர்பு இருப்பதால்தான் போதைப்பொருளை தடுக்க முடியாதுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் “போதைப்பொருள் பயன்பாடு எங்களுடைய எதிர்கால சந்த்தியை பாதிக்கின்ற விடயம். இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற கட்டாயதேவை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இவற்றை மூன்று வகையாக பிரித்து பார்க்கலாம்.
போதைப்பொருள் வருவதை தடுப்பது முக்கிய செயற்பாடு. அரச அதிகாரிகளோடு பொலிசாரோடு இணைந்து இதை செய்வதில் பாரிய இடர்பாடுகள் காணப்படுகிறது.
காரணம் அதிகாரிகள், பொலிசார், படைத் தரப்பினருக்கு போதைபொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.
இதற்கான பல தகவல்கள் எங்களிடம் இருக்கிறது .இதனை தடுப்பதற்காக இதனை செய்பவர்களை காட்டிகொடுக்கின்ற போதேல்லாம் அவர்களோடு பொலிசாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து செயற்படுவது அம்பலமாகி இருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் பயிற்றப்பட்டவர்களைக் கொண்டு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும். இதற்கு அரசாங்கத்தினால் மட்டுமன்றி தனியார் நிறுவனங்களையும் உள்வாங்கி செயற்பட வேண்டும்
இதற்கான செயல்பாடுகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். அடுத்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் நாம் பாடசாலை ரீதியாக இதனை ஆரம்பிக்கின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.