பதினைந்து இலட்சத்திற்கு அண்மித்த அரச உத்தியோகத்தர்களை பன்னிரெண்டு இலட்சமாகக் குறைத்தால் அரச சேவையை மிக இலகுவாகப் பேண முடியும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே கூறுகிறார்.
இதுவரை காலமும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்புகள் வெற்றிடங்கள் இருக்கும் போது அல்ல, மாறாக அரசாங்கத்தின் பல்வேறு கொள்கை தீர்மானங்களினூடாகவே மேற்கொள்ளப்பட்டன என எம்.எம்.பி.கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் இருபதாயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதுடன், இதே எண்ணிக்கையை மீண்டும் அரசுப் பணியில் அமர்த்தும் திட்டமும் சில காலமாக நடைமுறையில் உள்ளது என்றார்.
ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பொதுச் செலவினங்களைக் குறைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, வருடத்திற்கு இருபதாயிரம் அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றாலும், அவ்வாறானவர்கள் மீண்டும் அரச சேவைக்கு நியமிக்கப்பட மாட்டார்கள் என செயலாளர் குறிப்பிட்டார்.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக அடுத்த சில வருடங்களில் அரச சேவையை படிப்படியாக குறைக்க முடியும் எனவும் செயலாளர் தெரிவித்தார்.
மேலும், ஐந்து வருட காலத்திற்கு அரச உத்தியோகத்தர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதன் மூலம் அரச சேவையை திட்டமிட்ட வகையில் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், இந்த வேலைத்திட்டத்தின் மூலம் எந்தவொரு அரச ஊழியருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது எனவும் செயலாளர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஓய்வு பெறும் வயதை அறுபது ஆண்டுகளாகக் குறைப்பதன் மூலம், இந்த ஆண்டு இறுதியில் சுமார் இருபத்தைந்தாயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.
அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அறுபது வயதை அடையும் போது ஓய்வு பெற வேண்டும் என்ற வர்த்தமானி கடந்த 5ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.