கொழும்பு - பொரள்ளை மயானத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பணிப்பாளரும், பிரபல தொழிலதிபருமான தினேஷ் சாஃப்டர் உயிரிழந்தமை தொடர்பில் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு இலக்கம் 02 நீதிமன்றத்தின் பதில் நீதவான் சம்பத் ஜயவர்தனவின் உத்தரவிற்கு அமைய, நேற்றைய தினம் தினேஷ் சாஃப்டரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.
இதன்படி, கழுத்து நெரிக்கப்பட்டமையே, உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
போலீஸ் விசாரணை கோணங்கள்
இந்த சம்பவம் தொடர்பில் பல விசேட போலீஸ் குழுக்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் படுகொலை விசாரணை பிரிவு ஆகியவற்றின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சிசிடிவி காணொளிகள் மற்றும் தொலைபேசி தரவுகளின் அடிப்படையிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொது மயானத்தின் ஊழியர்கள், தினேஷ் சாஃடரின் மனைவி உள்ளிட்ட சுமார் 15 பேரிடம் போலீஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
தினேஷ் சாஃப்டர், பொரள்ளை பொது மயானத்திற்கு தனியாகவே வருகைத் தந்திருக்கலாம் என ஊகிப்பதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினேஷ் சாஃப்டரின் கார், பொது மயானத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதிக்கு அருகாமையில், நேற்று முன்தினம் இறுதிக் கிரியை ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த இறுதிக் கிரியைகளில் பங்குப்பற்றும் வகையில் சந்தேகநபர் வருகைத் தந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரும், ஊடகவியலாளருமான பிரையின் தோமஸிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
தாம் ஒரு கோணத்தில் மாத்திரம் விசாரணைகளை நடத்தாது, பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
பிரையின் தோமஸிடம் மாத்திரமன்றி, தமக்கு கிடைத்த அனைத்து சாட்சியங்களின் ஊடாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.
பிரையின் தோமஸிடம் விசாரணை
பிரபல சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரும், ஊடகவியலாளருமான பிரையின் தோமஸிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
உயிரிழந்த தினேஷ் சாஃப்டரிடமிருந்து பல கோடி ரூபா பணத்தை, பிரையின் தோமஸ் பெற்றுக்கொண்டுள்ளமை குறித்து, தினேஷ் சாஃப்டர் ஏற்கனவே போலீஸில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்.
தான் வழங்கிய பல கோடி ரூபாய் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காக, தான் செல்வதாக மனைவியிடம் தெரிவித்தே, தினேஷ் சாஃப்டர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதேவேளை, தனது நிறுவனத்தின் கடமையாற்றும் பணிப்பாளர் ஒருவருக்கும் இந்த விடயத்தை தினேஷ் சாஃப்டர் தெரிவித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில், தினேஷ் சாஃப்டரிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையின் தோமஸிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொரள்ளை போலீஸார், கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கொக்குணுவல முன்னிலையில் விடயங்களை முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
விடயங்களை ஆராய்ந்த நீதவான், சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையின் தோமஸிற்கு, வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளார்.
பிரையின் தோமஸிடம் இரண்டு கடவூச்சீட்டுக்கள் உள்ளதாகவும் போலீஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, இரண்டு கடவூச்சீட்டுக்களின் ஊடாகவும் வெளிநாடு செல்ல குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், தொலைபேசி தரவுகளின் ஊடாக விசாரணைகளை நடத்த போலீஸார் அனுமதி கோரிய நிலையில், தொலைபேசி தரவுகளை பெற்றுக்கொடுக்குமாறு உரிய தொலைபேசி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடந்தது என்ன?
கொழும்பு - பொரள்ளை பொது மயானத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து, பிரபல தொழிலதிபர் தினேஷ் சாஃப்டர், கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு மீட்கப்பட்ட தினேஷ் சாஃப்டர், உடனடியாக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தான் கடனை பெற்றுக்கொள்வதாக தெரிவித்து, நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில், தினேஷ் சாஃப்டர், கொழும்பு - பிளவர் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.
இவ்வாறு வெளியேறிய தினேஷ் சாஃப்டரின் தொலைபேசிக்கு, அவரது மனைவி பல தடவைகள் அழைப்புக்களை மேற்கொண்ட போதிலும், தொலைபேசி செயலிழந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஜி.பி.எஸ் ஊடாக தொலைபேசி அலைவரிசையை சோதனை செய்த நிலையில், அவரது தொலைபேசி பொரள்ளை மயானத்தை காண்பித்துள்ளதை அவரது மனைவி அவதானித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தினேஷ் சாஃப்டரின் நிறுவனத்தில் பணியாற்றும் மற்றுமொரு பணிப்பாளருக்கு அறிவித்த நிலையில், அவர் பொது மயானத்திற்கு சென்ற போதே, தினேஷ் சாப்டர், தனது காரிற்குள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்தே, மயான ஊழியர்களின் உதவியுடன், தினேஷ் சாஃப்டர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.