web log free
November 28, 2024

இலங்கையில் பொலிஸ், அரசியல்வாதி, வர்த்தகர் என முத்தரப்பும் இணைந்து கஞ்சா விற்பனை..!

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கஞ்சா கடத்தல், புதையல் அகழ்வு உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று நேற்று (09) காலை மொனராகலைக்குச் சென்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை தமது காவலில் எடுத்து நீண்ட நேரம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சந்தேகநபர்கள் இந்த மோசடிகளுக்கு பிரதேசத்தின் பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார உள்ளிட்ட 06 பேரை மொனராகலையில் உள்ள அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்தின் கூரையில் மறைத்து வைத்திருந்த 15 கிலோ கஞ்சாவுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று காலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தவிர, அவரது பொலிஸ் சாரதி, கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் மற்றும் புதையல் வேட்டையாடும் ஒருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மொனராகலை பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஸ்கேனிங் இயந்திரம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தளபதி பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் பூரண மேற்பார்வையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

இவர் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் இயந்திரத்தை எடுத்துச் செல்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நேற்று நள்ளிரவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பயணித்த ஜீப்பை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி சோதனையிட்டனர்.

சந்தேக நபரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நண்பர்கள் நால்வரும் ஜீப்பில் பயணித்த சாரதியும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமாரவுக்கு சொந்தமான மொனராகலை உத்தியோகபூர்வ இல்லத்தில் சோதனையிட்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகள், கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 550 கஞ்சா செடிகளை கண்டெடுத்துள்ளனர்.

15 கிலோ எடையுள்ள கஞ்சா கையிருப்பு உலர்த்துவதற்காக மேற்கூரையில் மறைத்து வைத்திருந்தது பின்னர் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தியதில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் படல்கும்புர பகுதியில் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் இயந்திரம் ஒன்றை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணையில், சந்தேகத்திற்குரிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று நேற்று காலை மொனராகலைக்கு சென்றிருந்தது.

அதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd