இந்த நாட்களில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் சுவாச மண்டலம் பாதிக்கப்படும் என்பதால் கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் அடிப்படை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தென் கொழும்பு பொது வைத்தியசாலையின் உடலியல் நிபுணர் டொக்டர் நந்தன திக்மதுகொட தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வைத்தியர் திக்மதுகொட மேலும் கூறியதாவது:
“இருமல், தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தலைசுற்றல் ஆகியவை இந்த காய்ச்சலின் அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த நாட்களில் டெங்கு, எலிக்காய்ச்சல் போன்றவையும் பரவி வருவதால் காய்ச்சல் நோயாளிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், உடனடியாக தகுதியான மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஓய்வு, சமச்சீர் உணவு மற்றும் அதிக திரவங்களை அருந்த வேண்டும். முடிந்தவரை முகமூடிகளை அணிவது மற்றும் கிருமி நாசினிகள் பயன்படுத்துதல் ஆகியவை இந்த காய்ச்சல் பரவாமல் தடுக்க உதவும்.