web log free
November 27, 2024

மார்ச் 9 தேர்தல் நடத்த முடியாது

பல்வேறு காரணங்களினால் திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 09ஆம் திகதி நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(20) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

நகர்த்தல் பத்திரம் ஒன்றினூடாக தேர்தல் ஆணைக்குழு இதனை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

தவிர்க்க முடியாத பல தடைகள் காரணமாக மார்ச் 09ஆம் திகதி தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குறித்த நகர்த்தல் பத்திரத்தில் தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது கடினம் என திறைசேரியின் செயலாளர் ஏற்கனவே ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

410.6 மில்லியன் ரூபா நிதி வழங்கப்படும் வரை வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க முடியாது என அரச அச்சகர் அறிவித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.

தேர்தல் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பாதுகாப்பை பெற்றுக்கொடுப்பதற்கு பொலிஸ் மா அதிபர் தவறியுள்ளதாகவும் அதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் 03 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அதன் நகர்த்தல் பத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலுக்கு தேவையான வாகன எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கு பொறுப்பான அரச நிறுவனங்களுக்கு அறிவித்துள்ள போதிலும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு இதன்போது தெரிவித்துள்ளது.

திறைசேரியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், அரச அச்சகம், பொலிஸ் மா அதிபர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் தேர்தலுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழு ஆவண ஆதாரங்களுடன் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd