web log free
March 28, 2024

இன்று நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை

நாடு முழுவதும் இன்று(01) தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறும் தொழில் வல்லுநர்களிடமிருந்து 06 வீதம் முதல் 36 வீதம் வரை வரி அறவிடப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

புதிய வரித் திருத்தத்தை மறுசீரமைப்பிற்கு உட்படுத்துமாறு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தமது கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அரசாங்கத்தால் அதற்கு உரிய பதில் வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போதிலும் அந்த கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்திருந்தது. 

இன்றைய தினம்(01), 12 இடங்களில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சுமார் 40 தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது அங்கத்தவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வைத்திய சேவைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்றைய தினம்(01) தமது உறுப்பினர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் சம்மேளன தலைவர், பேராசிரியர் ஷ்யாம் பன்னெஹெக குறிப்பிட்டுள்ளார்.

வங்கி ஊழியர்கள் இன்று(01) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்ஜன் சேனாநாயக்க கூறினார்.

வரித் திருத்தத்திற்கு எதிராக துறைமுக ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இன்றைய தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துள்ளனர்.