web log free
June 07, 2023

சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த மாதம் ஒப்பந்தம்

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டிற்கான பிணை எடுப்புப் பொதி தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் அடுத்த மாதம் கைச்சாத்திடவுள்ளது. அதன் பின்னர் பன்னாட்டு நன்கொடையாளர்கள் மற்றும் சில நாடுகளிடமிருந்து உதவிகள் வழங்கப்படும் என இரண்டு ஜனாதிபதியின் ஆலோசகர்கள் நேற்று தெரிவித்தனர்.

IMF உடனான இறுதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவுடன் ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றிலிருந்து இலங்கைக்கு அதிக உதவிகள் கிடைக்கும் என ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவன் விஜேவர்தன மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் தெரிவித்தனர்.

“நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு, சமீப காலமாக இளைஞர்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தை கைப்பற்றுமாறு எதிர்க்கட்சிகளை அழைத்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பதில் அளித்தவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. ஜனாதிபதியால் வரிசைகளை நிறுத்தி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்தது. தேசத்தின் நலனுக்காக இளைஞர்கள் தங்கள் பங்கை ஆற்றி தேசத்திற்கு நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ஒத்துழைக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்” என சாகல ரத்நாயக்க கூறினார்.

நாளாந்தம் எரிபொருள் விலை மாற்றியமைக்கப்படும் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போன்று இலங்கையும் இருக்க முடியும் எனவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். 2040 ஆம் ஆண்டளவில் இலங்கை ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்றும் அவர் கூறினார்.