web log free
June 07, 2023

அதிக மின் கட்டணம் வசூலிக்கும் ஆசிய நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னிலை

ஆசியாவிலேயே இலங்கை இரண்டாவது அதிகூடிய மின்சார விலையைக் கொண்டிருப்பதாகவும் மின்சார உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கு இந்நாட்டு ஆட்சியாளர்களிடம் முறையான தீர்வுகள் இல்லை என்றும் எரிசக்தி நிபுணர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய குற்றஞ்சாட்டுகிறார்.

ஒரு நாடு என்ற வகையில் நெருக்கடியிலிருந்து மீளத் தேவையான வெற்றிகரமான நடவடிக்கைகள் எதுவும் தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

வரலாற்றில் இதற்கு முன்னர் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது அரசியல் அதிகாரிகள் மக்களுக்கு தெளிவான விளக்கத்தை வழங்கியதாகவும், ஆனால் இம்முறை அவ்வாறான குறிப்புகளோ விளக்கங்களோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

500 மெகாவாட் மின்சாரம் எரிபொருளால் எடுக்கப்படும் எனவும், அந்தத் தொகை சம்பூரில் இருந்து வர வேண்டும் எனவும் திட்டம் இருந்ததாகவும் ஆனால் அது பலனளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பொறியியல் நிறுவகத்தின் வடமேற்குக் கிளை மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.