மட்டக்களப்பு, பட்டிப்பளை தாண்டாமலைக் காட்டில் உள்ள பாறைக் குகை ஒன்றில் வசித்து வந்தபோது கண்டுபிடிக்கப்பட்டவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் எஸ். நகுலேஸ்வரன் கூறுகிறார்.
நான்கு வருடங்களுக்கும் மேலாக அந்தக் குகையில் வசித்து வந்த அவர், பெரும்பாலும் வனப் பழங்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் டேவிட் என்று அழைக்கப்பட்டவர்.
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியவர் எனவும், குறித்த நபர் தற்போது மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், அவர் வீட்டில் இருந்து காணாமல் போனதை அடுத்து, உறவினர்கள் அவரைத் தேடினர், ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லாததால், அவரைத் தேடுவதைக் கைவிட்டனர்.
காட்டுக்குள் சென்ற ஒருவர் இவரைப் பார்த்து தகவல் தெரிவித்ததையடுத்து அம்பியூலன்ஸ் வாகனத்தின் உதவியுடன் குழுவினர் அவரை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.