அமைச்சர்கள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வெளிநாடு செல்லும்போது அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்து கொடுப்பனவுகளையும் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
அரசாங்க அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள், மாநகர சபை மேயர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறைக்கப்படும்.
மார்ச் 20ஆம் திகதி முதல் செலவுகளைக் குறைக்கும் முடிவு அமலுக்கு வரும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, படிப்பு, பயிற்சி, கலந்துரையாடல்கள், மாநாடுகள் போன்ற திறன் மேம்பாடு தொடர்பான வெளிநாட்டுப் பயணங்களின் போது நாளொன்றுக்கு 40 அமெரிக்க டொலர்களை அதிகபட்சமாக 30 நாட்களுக்கான சாதாரண கொடுப்பனவுகளை 25 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உத்தியோகபூர்வ பணிகள் அல்லது பிற வெளிநாட்டு விவகாரங்களுக்காக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் போது ஒரு நாளைக்கு 75 அமெரிக்க டொலர்கள் வீதம் அதிகபட்சமாக 15 நாட்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 10 நாட்களுக்கு குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டு கொடுப்பனவுகளை செலுத்துவதில் ஐந்து வகை நாடுகளின் கீழ் முதல் மற்றும் இரண்டாவது பிரிவின் கீழ் வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் 30% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன், உத்தியோகபூர்வ அரசாங்க விஜயத்தின் போது தூதுக்குழுவை வழிநடத்தும் அமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளரின் கோரிக்கைக்கு உரித்தான 750 அமெரிக்க டொலர் கேளிக்கை கொடுப்பனவை முற்றாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.