கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த உத்தரவின் காரணமாக சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் இடமாற்றச் சபையின் பரிந்துரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படவிருந்த இந்த ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்படுவதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்தியதாகவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஆசிரியர் இடமாற்றத்தின் அடிப்படையில் பாடசாலைக் கல்விச் செயற்பாட்டில் சிக்கல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், G.E.O.விற்கு கல்வி கற்கும் மாணவர்களின் பரீட்சை கற்கைகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாலும் ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து பிரச்சினைகள், அதிக செலவுகள் உள்ளிட்ட பல மனிதாபிமான பிரச்சினைகளின் அடிப்படையில் ஆசிரியர்களின் இடமாற்றத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறும் அல்லது நிவாரணம் வழங்குமாறும் கோரி ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய ஆசிரியர் குழுவொன்றும் இம்முறை ஆசிரியர் இடமாற்றத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒரு குழு தமது இடமாற்றங்களை அரசியல் பழிவாங்கல் என வர்ணிக்கத் தயாராகி வருவதாகவும் ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.