"கடந்த ஜூலை 9 ஆம் திகதி நான் தீப்பிடித்த நாட்டையே பொறுப்பேற்றேன். குழப்பத்தில் இருந்த ஒரு நாடு. நாளைய தினம் பற்றிய நம்பிக்கை ஒரு துளி கூட இல்லாத நாடு. அதிகாரப்பூர்வமாக திவாலான நாடு என அறிவிக்கப்பட்ட நாடு. பணவீக்கம் 73% வரை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்ட நாடு.
நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் பல நாட்களாக தவித்த மக்கள் வாழ்ந்த நாடு. பாடசாலைகள் மூடப்பட்ட நாடு. ஒரு நாளைக்கு 10 - 12 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நாடு. விவசாயிகளுக்கு உரம் இல்லாத நாடு.
இத்தகைய பின்னணியில் யாரும் பொறுப்பேற்க விரும்பவில்லை. சிலர் பின் சென்றார்கள். சிலர் ஜாதகம் பார்க்க காலம் தேவை என்றார்கள். சிலர் நழுவினர். சிலர் பயந்தார்கள். யாரும் பொறுப்பேற்க முன்வராத போது தான் என்னிடம் கேட்கப்பட்டது.
சவாலை நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டேன். பாராளுமன்றத்தில் எனக்கு அதிகாரம் இல்லை. என்னிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவில்லை. இவை எதுவும் இல்லாத போதும் என்னிடம் இருந்தது ஒரே ஒரு பலம் தான். அது நான் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்ற என்னுடைய நாட்டை என்னால் மீட்க முடியும் என்ற நம்பிக்கை மட்டும் தான் எனக்கு இருந்த ஒரே பலம்.
இந்த மிகப் பெரிய சவாலை ஏற்கும் போது, கடந்த கால அனுபவங்களினால் எனக்கு இருந்த நம்பிக்கையை கொண்டு நான் நாட்டை பொறுப்பேற்றேன். நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது என்ற எண்ணத்தில் சவாலை ஏற்றுக்கொண்டேன்..." என ஜனாதிபதி குறிப்பிட்டார்.