கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக நாடு அதே உத்தியை நடைமுறைப்படுத்தியதால் அரச சொத்துக்களை விற்று அல்லது கடன் பெற்று இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியாது என NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடன் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்ற போது அதனை செய்திருக்க முடியும் என பாணந்துறையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் தெரிவித்தார்.
"அவர் இந்த முறை IMF-ல் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே பெறுகிறார். அவர் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நான்கரை ஆண்டுகளுக்குள் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்று 1 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெற்றார். ஆனால், அவரால் நாட்டை வளர்க்க முடியவில்லை. நான்காண்டுகளுக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டும் பெற்றுக்கொண்டு நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படி மீட்க முடியும்,” என்றார்.
கடந்த காலத்தில் 88 அரசாங்க நிறுவனங்களை இலங்கை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், அரச சொத்துக்களை விற்பது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமையாது என்றும் கூறினார்.
அரச வளங்களை விற்பனை செய்வதன் பின்னணியில் மோசடி, ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் தலைவிரித்தாடுவதாக தெரிவித்த அவர், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மோசடி மற்றும் ஊழலற்ற அரசாங்கம், திறமையான அரச சேவை, சட்டம் ஒழுங்கு, புதிய அரசியலமைப்பு மற்றும் அரச வளங்களை முழுமையாக பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க, எதிர்கால NPP அரசாங்கம் எதிர்காலத்தில் அவ்வாறானதொரு அரசாங்கத்தை உறுதி செய்யும் எனவும் தெரிவித்தார்.