சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இலங்கையின் குரங்குகளை வழங்குமாறு சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இலங்கைக்கு இந்த கோரிக்கையை வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் நடைபெற்றது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் விவசாய அமைச்சு, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டுக்கு குரங்குகளை வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக அமைச்சர்கள் சபையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் விவசாய அமைச்சு, விலங்கியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளடக்கப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழுவை உடனடியாக நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட உள்ளது.
இலங்கையில் குரங்குகள் சனத்தொகை 30 இலட்சத்தை அண்மித்துள்ளதாகவும், இந்நாட்டில் பயிர் சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் குரங்குகள் முதன்மையானது எனவும் தெரியவந்துள்ளது.