இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்றைய தினம்(20) பதிவாகியுள்ளது.
இது நிங்கலூ சூரிய கிரகணம் (Ningaloo Solar Eclipse) அல்லது ஹைபிரிட் சூரிய கிரகணம் (Hybrid Solar Eclipse) என வானியல் அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு 'சூரிய கிரகணம்' என அழைக்கப்படுகின்றது.
சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது 'முழு சூரிய கிரகணம்' எனவும் ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அது 'பகுதி சூரிய கிரகணம்' எனவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த 'ஹைபிரிட் சூரிய கிரகணம்' ஒரு அரிய கிரகண நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
'ஹைபிரிட் சூரிய கிரகணம்' உலகின் சில பகுதிகளில் இது வளைய கிரகணமாக தோன்றும் முன் முழு கிரகணமாக மாறுமென கூறப்படுகிறது.
சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்காது, இந்த அரிய வகை கிரகணத்தின் போது, சூரியன் சில நொடிகளுக்கு ஒரு வளையம் போன்ற வடிவத்தில் காட்சியளிக்கும். அது 'நெருப்பு வளையம்' என அழைக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் பூரணமாக தெரியக்கூடிய 'ஹைபிரிட் சூரிய கிரகணத்திற்கு' அவுஸ்திரேலியாவின் 'நிங்கலூ' கடற்கரையின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஹைபிரிட் சூரிய கிரகணமானது, இன்று(20) காலை 7.04 முதல் நண்பகல் 12.29 வரை நிகழ்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தென்படாத 'ஹைபிரிட் சூரிய கிரகணம்' கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.