சீனாவில் உள்ள தமது நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் மிருகக்காட்சிசாலையில் கண்காட்சிக்காக மாத்திரம் இலங்கையில் இருந்து குரங்குகளை கோருவதாக சீனாவின் ஷிஜியன் வூயு விலங்கு வளர்ப்பு நிறுவனம் விவசாய அமைச்சுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
தனது நிறுவனம் சீனாவில் பிரபல மிருகக்காட்சிசாலை நடத்துவதாகவும் இலங்கையில் உள்ள குரங்குகளில் சிலவற்றை கொடுத்தால் அவற்றை தனது மிருகக்காட்சிசாலையில் காட்சிப்படுத்தலாம் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கினால் குரங்குகளை பிடித்து அழைத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தனது நிறுவனம் பல்வேறு நாடுகளில் இருந்து வன விலங்குகளை பெற்று தனது உயிரியல் பூங்காக்களில் கண்காட்சிக்கு பயன்படுத்தியுள்ளதாக கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விவசாய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், குறித்த நிறுவனம் ஒரே தடவையில் ஆயிரம் குரங்குகளை சீனாவிற்கு கொண்டு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு வருடத்திற்குள் இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் குரங்குகளை அதன் மிருகக்காட்சிசாலைகளுக்கு அழைத்துச் செல்ல உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு வெளியே கொண்டு செல்வதற்கு முன்னர் குரங்குகளைப் பிடிப்பது, தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட சீன நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தால் சீன அரசாங்கத்தின் வனவிலங்கு நிறுவனத்தின் அனுமதிக்கு விண்ணப்பிப்பதாகவும் சீன நிறுவனம் விவசாய அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.