வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மறு அறிவித்தல் கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இன்று(11) 75 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வட மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யும் அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன் மேல், தென் கரையோர பகுதிகள் மற்றும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், இடி மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.