அனாதை இல்லங்களிலிருந்து சிறுவர்களை மிக சூட்சமமாக அழைத்துச் சென்று அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து கொழும்பில் பல இடங்களில் பிச்சை எடுக்க செய்யும் மோசடியை தாம் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் நேற்று (11) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் சிறுவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்த பின்னர், கை, கால்கள், உதடுகள், தொடைகள் உள்ளிட்ட பல்வேறு பாகங்களை சூடான இரும்பினால் சூடு வைத்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
பொதுமக்களிடம் அதிக அனுதாபத்தை பெற்று பிச்சை எடுக்கும் நோக்கில் சிறுவர்கள் சூடு வைக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபரான பேலியகொட நாவ நுகே வீதியைச் சேர்ந்த நிலுகா பிரியதர்ஷனி என்பவரே கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் அம்பேபுஸ்ஸ சிறுவர் இல்லத்திலிருந்து 11 வயதுடைய சிறுவனை சூட்சமமாக கொழும்புக்கு அழைத்து வந்து, குழந்தைக்கு போதைப்பொருள் கொடுத்து, குழந்தையின் கைகால், உதடு மற்றும் முதுகில் இரும்பு கம்பியால் தீ வைத்து எரித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
குறித்த குழந்தை தற்போது கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிள் (91921) ஹசன் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவலவிடம் தெரிவித்தார்.
சந்தேகநபர் 11 வயது குழந்தைக்கு போதைப்பொருள் கொடுத்து போதைக்கு அடிமையாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.குழந்தையை பொலிசார் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, போதை இல்லாமல் வாழ முடியாது மாமா என்று கூறியதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த குழந்தையை வைத்தியர்கள் பரிசோதித்த போது, ஆசனவாய்க்கு அருகில் 2 ரூபா நாணயம் போன்ற பெரிய தீக்காயம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் ராஜகிரிய, கொலன்னாவ, ஒபேசேகரபுர பிரதேசத்தில் குழந்தையுடன் பிச்சையெடுத்து வந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றில் அறிவித்ததுடன், அங்கு பணம் வழங்கிய ஒருவர் மீது சந்தேகத்தின் பேரில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மோசடியில் ஈடுபட்ட ஏனைய நபர்கள் மற்றும் பிச்சையெடுக்கும் சிறுவர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.