களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் சுகாதார கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக களுத்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும், 15-18 வயதுடைய பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இந்த நிகழ்ச்சித் தொடரை ஆரம்பிக்க முடியும் எனவும், இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற கல்வித் திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், குழந்தைகளுக்கான பாலியல் சுகாதாரக் கல்வி குறித்த குறைந்தபட்ச அறிவை வளர்க்க சுகாதாரத் துறை மற்றும் கல்வித் துறைகள் தலையிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இலங்கையின் சுகாதார சேவைகளுக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க உலக வங்கியின் விசேட பிரதிநிதிகளுடன் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.