மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் பன்றிகளுக்கு வைரஸ் நோய் பரவி வருவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
பன்றிகளின் சுவாச மண்டலத்தில் ஏற்படும் இந்த வைரஸ் நோய் TRRS என்ற பெயரால் அறியப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்தார்.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பன்றிகள் உயிரிழப்பதாகவும் நோய்க்கான தடுப்பூசிகளை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹேமலி கொத்தலாவல குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம் இல்லை என அவர் கூறினார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் அண்மையில் மாடுகளுக்கிடையே Lumpy skin disease எனப்படும் தோல் கழலை நோய் பரவியமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் செய்தி வௌியிட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் Lumpy skin disease அறிகுறிகளுடன் காணப்படுவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தின் ஹொரம்பாவ, நாரம்மல, கெக்குணகொல்ல, மெட்டியாவ, மிதியால, பண்டாரகொஸ்வத்த, பரகஹகொட்டுவ உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளிடையே தோல் கழலை நோய் பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நோய்த் தாக்கத்தினால் குறித்த பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.