web log free
November 26, 2024

இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகள் மீட்பு, ஒருவர் கைது

இலங்கைக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடல் அட்டை கடத்தலில் ஈடுபட்ட சஞ்சய் காந்தி என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பாலைக் குடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இதனை யடுத்து அப்பகுதியை சேர்ந்த சஞ்சய் காந்தி என்பவரது வீட்டில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் சுமார் 300 கிலோ அளவிலான கடல் அட்டைகள் பதப்படுத்தப் பட்ட நிலையில் இருந்தது பறிமுதல் செய்யப் பட்டது.

 

இதனை யடுத்து சஞ்சய் காந்தியை கைது செய்த போலீசார் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். இது குறித்து வனத்துறை தரப்பில் கூறியதாவது : ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சமீப காலமாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கடல் அட்டைகள் மற்றும் போதை பொருட்களை கடத்துவது அதிகரித்துள்ளது. இந்திய அரசால் அட்டவணை ஒன்றில் வகைப் படுத்தப் பட்டுள்ள கடல் அட்டைகளை கடத்துவது தடை செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில் சமூக விரோதிகள் சிலர் அதிக பணத்திற்கு ஆசைப் பட்டு கடல் அட்டைகளை கடல் மார்க்கமாக இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர். கடல் அட்டைகள் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப் பட்டுள்ள ஒன்றாகும். இக்குற்றங்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd