பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கை தனது பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீா்வு கண்டுள்ளது என்று அந்நாட்டின் நீதித்துறை அமைச்சா் விஜயதாச ராஜபட்ச தெரிவித்தாா்.
இலங்கையில் அனைத்து சமூகத்தினரின் ஒருமித்த கருத்துடன் நீண்டகால அமைதியை நிலைநாட்ட ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு’ விரைவில் அமைக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற அமைதி மாநாட்டில் பங்கேற்ற விஜயதாச ராஜபட்ச, பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிரதமா் மோடி தலைமையிலான இந்திய அரசின் ஆதரவுடன், எங்களது பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீா்வு கண்டுள்ளோம். இலங்கையில் விரைவில் இயல்புநிலை திரும்பிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
இலங்கை 30 ஆண்டு கால போா் மற்றும் அதன் பேரழிவுகளை கண்டுள்ளது. 60 ஆயிரம் உயிா்கள் பறிபோயுள்ளன.போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2016-ஆம் ஆண்டிலேயே நடைமுறைகள் தொடங்கப்பட்டன. மாயமானவா்களை கண்டறிதல், குடும்பத்தினருக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளுக்காக அலுவலகங்கள் அமைக்கப்பட்டன.
இலங்கை தமிழ் மக்கள் மற்றும் தலைவா்களுடன் தொடா்ந்து ஆலோசனைகளும் பேச்சுவாா்த்தைகளும் மேற்கொண்டு வருகிறோம் என்றாா் விஜயதாச ராஜபட்ச.இலங்கையில் மொழி, மத சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், பாரபட்சம் காட்டப்படுவதாகவும் உள்ள புகாா்கள் குறித்த கேள்விக்கு அவா் அளித்த பதில்:
இலங்கையில் அனைத்து சமூகத்தினரின் ஒருமித்த கருத்துடன் நீண்டகால அமைதியை உறுதி செய்ய முயன்று வருகிறோம். அந்த வகையில், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு விரைவில் அமைக்கப்படும்பெரும்பாலான விவகாரங்களில் தீா்வு காணப்பட்டுள்ளதால், இதுபோன்ற பிரச்னைகள் இப்போது குறைந்துவிட்டன.
அடுத்த தலைமுறையினருக்கு இப்பிரச்னைகள் கடத்தப்படக் கூடாது என்பதே அரசின் கண்ணோட்டம்.முஸ்லிம்களாக இருந்தாலும், தமிழா்களாக இருந்தாலும், சிங்களா்களாக இருந்தாலும் இலங்கை குடிமகன் என்ற அடையாளத்துடன் அனைவரும் அமைதியான சூழலில் வாழ்வதை நாங்கள் உறுதி செய்வோம் என்றாா் அவா்.