உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) உள்ளிட்ட மக்களின் பணத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள நிதியங்களின் அங்கத்துவ இருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கடந்த காலங்களில் செலுத்தப்பட்டுள்ள அதிக ஓய்வூதிய நிதி கொடுப்பனவு வீதங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது என ஜனாதிபதி கூறினார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் இலங்கையின் வங்கி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்கோ, எந்தவொரு அரச அல்லது தனியார் வங்கியின் ஸ்திரத்தன்மைக்கோ பாதிப்பு ஏற்படாது என கம்பஹா மாவட்ட செயலகத்தின் நிர்வாகக் கட்டடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய போது ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 50 மில்லியனுக்கும் மேற்பட்ட வங்கி வைப்பீட்டாளர்களின் எந்தவொரு வைப்புகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது எனவும் வங்கி வைப்புகளுக்காக செலுத்தப்படுகின்ற வட்டிக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.
வௌிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு யோசனைகளை இன்று (28) நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, பிரதமரின் வேண்டுகோளுக்கு அமைய, எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்து, சபாநாயகர் இன்று பிற்பகல் அதிவிசேட வர்த்தமானியொன்றை வௌியிட்டுள்ளார்.
நிலையியல் கட்டளை 16-இன் கீழ் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.