ஸ்ரீலங்கன் விமான சேவையை உடனடியாக மறுசீரமைக்காவிட்டால், அந்த நிறுவனத்தின் சுமார் 6000 ஊழியர்களின் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (30) ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக நஷ்டமடைந்து வரும் ஸ்ரீலங்கன் விமான சேவையை அரசாங்கம் தொடர்ந்தும் பராமரிக்க முடியாது எனவும், மக்களின் வரிப்பணத்தை தொடர்ந்தும் வீணடிப்பது நியாயமற்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நிதி நிபுணர்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பணிகளை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.