web log free
November 26, 2024

தோட்டத் தொழிலாளர்களின் EPF குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதிக்கு செலுத்திய 70 கோடி ரூபாய்க்கு தோட்டத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் வழங்கிய தகவலில் உள்ள முரண்பாடுகள் காரணமாக கணக்கு காட்ட முடியாமல் உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை மேற்பார்வை நாடாளுமன்றக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, பல பெருந்தோட்டக் கம்பனிகள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான கொடுப்பனவுகளை செலுத்த தவறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குழு தெரிவித்துள்ளது.

சில நிறுவனங்கள் ஊழியர்களின் சேமலாப நிதிக்கு பெரும் தொகை நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியிருப்பதாகவும் குழு குறிப்பிடுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு ஜூன் 22ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் கூடிய போது இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன.

இக்குழுவின் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி, தொழிலாளர்களைப் பாதுகாத்து, தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப  நிதி மற்றும் தற்போதைய மாதாந்திர கொடுப்பனவுகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், தேசிய அடையாள அட்டை இலக்கத்தின்படி கணக்குகளை ஆரம்பிப்பதன் மூலம் ஒரே நபருக்கு பல கணக்குகளை வைத்திருக்கும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும் எனவும், இது தொடர்பில் அவதானம் செலுத்தி செயற்படுமாறும் குழு அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், இஷாக் ரஹ்மான், மஹிந்தானந்த அளுத்கமகே, வடிவேல் சுரேஸ், வேலு குமார், சுஜித் சஞ்சய் பெரேரா, எம். உதயகுமார், கலாநிதி சீதா ஆரம்பேபொல சந்திம வீரக்கொடி மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் துஷார இந்துனில், தொழிலாளர் ஆணையாளர், மத்திய வங்கி மற்றும் ஊழியர் நலன் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தோட்டத்திலுள்ள பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd