கிழக்கு மாகாண கல்வி செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளை ஒரே இரவில் பதவியை விட்டு தூக்குவதாக அமைச்சர் நசீர் அஹமட் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
அமைச்சர் நசீர் அஹமட் அவ்வாறு கருத்து வெளியிடுவது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரச அதிகாரிகளின் கோபத்தை தூண்டுவது போல் அமைந்துள்ளதென பெயர் குறிப்பிட விரும்பாத குறித்த முன்னாள் அரச அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இணையமொன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்கட்சி சார்பில் (ஐக்கிய மக்கள் சக்தி) பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான நசீர் அஹமட் அமைச்சு பதவி எனும் எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் அதன் உணர்வுமிக்க ஆதரவாளர்களையும் காட்டிக் கொடுத்து அரசாங்கத்தின் காலடியில் விழுந்து கேவலமான பிழைப்பு நடத்துவது போல் அரச அதிகாரிகள் செயற்படுவதில்லை என குறித்த அரச அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அமைச்சர் நசீர் அஹமட்டால் காத்தான்குடியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு அரச அதிகாரிகள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை தங்களது எதிர்ப்பையும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
கிழக்கில் தான் வைப்பது தான் சட்டம் எனவும், கல்வி செயலாளர் திஸாநாயக்கவை இரவோடு இரவாக தூக்குவதாகவும், அவரை வீதிக்கு இறங்க விடாமல் செய்வதாகவும் அமைச்சர் நசீர் அஹமட் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில் நசீர் அஹமட் தனது எல்லையை மீறி வெளியிட்ட இவ்வாறான கருத்துக்கள் சிங்கள முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலையை ஏற்படுத்துவதாகவும், அவர் தனது அரசியலை தக்க வைத்து கொள்ள இவ்வாறு கருத்து வெளியிட்டமைக்கு எதிராக அரச அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்துள்ளதுடன், தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
நசீர் அஹமட் தொடர்பில் மேலிடத்தில் முறையிட உள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் அரச ஊழியர்களை இணைத்து கொண்டு பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் பிரபல அரச ஊழியர்கள் தொழிற்சங்க முக்கியஸ்தர் தெரிவித்தார்.