இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதிடம் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
அதன்பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது:-
அண்டை நாடுகள் உடனான கொள்கையில் இலங்கை முதலிடத்தை வகிக்கிறது. நாகையில் இருந்து இலங்கைக்கு படகு சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே வர்த்தகம் போன்றவற்றிற்கு புதிய கதவுகள் திறந்து உள்ளன.
மீனவர் பிரச்சனையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும். தமிழ் சமூகத்தின் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புகிறோம்.
இந்தியா மற்றும் இலங்கை இடையே விமான போக்குவரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா- இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்புகான தொலைநோக்கு திட்ட ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசும்போது, நாகை- காங்கேசன் இடையிலான படகு சேவை, சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவும் என்றும், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா முதன்மை இடத்தில் உள்ளதாகவும் கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சியானது, அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துக்கும் நன்மை பயக்கும் என்றும் ரணில் நம்பிக்கை தெரிவித்தார்