web log free
May 06, 2025

13ஆவது திருத்தம் குறித்த நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் - ஜனாதிபதி

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(09.08.2023) ஆற்றிய விசேட உரையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கூறுகையில்,13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த எனது யோசனையை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் எனது கட்சிக்கு மூன்று உறுப்பினர்களே உள்ளனர். ஆகவே 13 ஆவது திருத்த்தை முன்னோக்கிகொண்டு செல்வதானால் அதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவும் அவசியம்.

அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் எதிர்ப்பது என்ற பாரம்பரிய நடைமுறையில் இருந்து எதிர்க்கட்சிகள் விலகிச் செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்தார்.

முடிவெடுப்பதில் எதிர்க்கட்சிகளைக் கருத்தில் கொண்டு, சமத்துவமானதும், ஒத்துழைப்புடனான அரசியல் சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம்பகத்தன்மையுடனும், பொறுப்புடனும் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

இந்த புதிய அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் புதிய பயணத்திற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளிலேயே நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்களின் தனிப்பட்ட வாத, விவாதங்களை தவிர்த்து நாட்டின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

நாட்டின் நீண்ட கால நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முடிவுகளை கூட்டாக எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நேர்மையான ஒற்றுமை தேவை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd