web log free
May 02, 2025

ரணிலின் உரைக்கு தக்க சமயத்தில் பதிலடி கொடுக்க காத்திருக்கும் சம்பந்தன்

'13' குறித்த ரணிலின் உரைக்கு  

"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வின் அவசியம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரையை முழுமையாகக் கேட்டேன். ஆனால், அவரின் உரை தொடர்பில் அவசரப்பட்டுப் பதிலளிக்க விரும்பவில்லை. உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்."

இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

'13ஆவது அரசமைப்புத் திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு இந்த நாட்டின் அதியுயர் சட்டமாகும். அதை நாம் புறக்கணிக்க முடியாது. நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நிறைவேற்று அதிகாரமும், நாடாளுமன்றமும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்' - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று(09) முற்பகல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.

13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது முன்மொழிவுகளையும் எதிர்காலத் திட்டங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைத்து விசேட உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோது,

"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் எமது உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்துக்குப் பின்னர் அவர் தலைமையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்திலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் எழுதிய கடிதத்திலும் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். இந்தநிலையில், 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வின் அவசியம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையை முழுமையாகக் கேட்டேன். ஆனால், அவரின் உரை தொடர்பில் அவசரப்பட்டுப் பதிலளிக்க விரும்பவில்லை. உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்." - என்று குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd