முஸ்லிம் மக்களின் வாக்குகளை இழக்கக்கூடாது என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கவில்லையென, முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக 200 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டும், சஹ்ரான் கைது செய்யப்படவில்லை என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்துவது அவசியமற்றது என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், இஸ்லாமிய அடிப்படைவாதியான பயங்கரவாதி சஹ்ரான் மீதும் அவரது தரப்பினர் மீதும் கடும் வைராக்கியம் எமக்குள்ளது. அதேபோன்று குண்டுத்தாக்குதலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் மீதும் கடுமையான வைராக்கியம் உள்ளது. சிறுபான்மையினத்தவரின் வாக்குகளுக்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெறுவதற்கு முன் 2019 ஏப்ரல் 20ஆம் திகதி பயங்கரவாதி சஹ்ரான் உறுதிப்பிரமாணம் செய்து அதனை 28 நிமிட காணொளியில் பதிவு செய்துள்ளார்.
நியூசிலாந்து பள்ளியில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் மரணத்துக்கு பழி தீர்ப்பதற்காக கத்தோலிக்க தேவாலயங்களில் குண்டுத்தாக்குதலை மேற்கொள்வதாகவும் முஸ்லிம்களை கொன்று முஸ்லிம் குழந்தைகளையும் பெண்களையும் விதவைகளாக்கி விட்டு இலங்கைக்கு வந்து விடுமுறையைக் கழிக்கும் வெளிநாட்டவர்களை கொல்வதற்காகவுமே ஹோட்டல்களில் தாக்குதல் மேற்கொள்வதாகவும் சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகள் தமது உறுதிமொழியில் குறிப்பிட்டுள்ளார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் பாராளுமன்ற தெரிவுக் குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் எவ்விடத்திலும் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தாக்குதல் இடம்பெற்றதாக குறிப்பிடப்படவில்லை.
குண்டுத்தாக்குதல் தொடர்பாக தற்போது எதிர்தரப்பினர் சர்வதேச விசாரணைகளை கோருகிறார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலால் 5 அமெரிக்க பிரஜைகள் உயிரிழந்துள்ளார்கள். அதன்படி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் 33 அமெரிக்க நிபுணர்கள் நாட்டுக்கு வருகை தந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டார்கள் என்றார்.