கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியானது கடுமையான போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் அதிகம் உள்ள பிரதேசமாக அண்மையில் இனங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கலந்து கொண்டு பேசிய கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி, ஊட்டச்சத்து குறைபாடுள்ள 320 சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் 64 பேர் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் 1,439 பேர் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் முறையே 1,432, 960 மற்றும் 909 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
தற்போதுள்ள நிலைமையை எதிர்கொள்வதற்காக கொழும்பு மாநகர சபை விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் இனங்காணப்பட்ட சகல சிறுவர்களும் சபையின் வைத்திய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பில் காணப்படும் போசாக்கு குறைபாடுள்ள சிறார்களுக்கு போசாக்கு உணவு வழங்குவதற்கு சபை செயற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.