web log free
November 25, 2024

நோயாளிக்கு பதிலாக ஆம்புலன்சில் ஐஸ் போதைப்பொருள்

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளக்கமம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனைக்கென மாதிரியுடன் வருகை தந்த வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபரான முருங்கன் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி தப்பியோடி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,

மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முருங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வங்காலையை சேர்ந்த சாரதி ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் நபர் ஒருவரும் ஐஸ் போதை பொருள் விற்பனைக்கு என 179 கிராம் எடை கொண்ட மாதிரி ஐஸ் போதைப்பொருள் பொதி ஒன்றை சனிக்கிழமை இரவு முருங்கன் பாடசாலைக்கு பின்புற மைதானத்தில் அரச அம்புலன்ஸ் வண்டியில் கொண்டு வந்த நிலையில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இரு நபர்களும் பொலிஸ் அதிகாரிக்கு கடித்து, தாக்கி தப்பிக்க முயன்ற நிலையில் பிரதான சந்தேக நபரான முருங்கன் (வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி சாரதி) தப்பி ஓடியுள்ளார்.

மற்றைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரச அம்புலன்ஸ் வாகனத்தில் போதை பொருள் கடத்தப்பட்டமை பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அம்புலன்ஸ் வண்டி மற்றும் கைப்பற்றப்பட்ட ஐஸ் மற்றும் இரண்டாம் சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

குறித்த வங்காலையை சேர்ந்த முருங்கன்முன்னதாக பல்வேறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அம்புலன்ஸ் வண்டி பல தடவைகள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு சந்தேக நபர்களின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Last modified on Tuesday, 03 October 2023 05:44
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd