இலங்கையில் அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும் முறைகேடுகளைக் குறைப்பதற்கும் முழு அரச சேவையையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையின் ஊடாக நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.
பிரதேச செயலகப் பிரிவுகள், பிரதேச சபைகள், மாநகர சபைகள், மாவட்டச் செயலக அலுவலகங்கள் உள்ளிட்ட ஒன்பது அரச நிறுவனங்கள் மற்றும் ஒன்பது முன்னோடித் திட்டங்களும் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கி நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அரச சேவையானது டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக வினைத்திறனுடையதாகவும் பலப்படுத்தப்படும் எனவும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் “Digicon 2023-2030” வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.