நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் எமது நாடு உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று (04) காலை விவசாய அமைச்சில் உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் இடம்பெற்றது.
இதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய சாத்தியம் குறித்து, தோட்டங்களில் மரக்கறிகளை பயிரிடும் திட்டமும், இந்தப் பருவத்துக்கான உணவுப் பயிர்த் திட்டமும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு விவசாயச் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக சுமார் 70,000 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன், தற்போது பல மாகாணங்களில் பெய்து வரும் தொடர் மழையினால் அறுவடைக்கு வரவிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்களும் அழிந்துள்ளன.
தாழ்வான பகுதிகளில் மரக்கறி பயிர்களும் மழையினால் நாசமாகியுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சுமார் 15,000 ஏக்கர் வெண்டைக்காய் தோட்டங்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த பச்சைப்பயறு தேவையில் 40 சதவீதத்தை இந்த சாகுபடியின் மூலம் பெற முடிந்ததாக கூறினார்.