எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் இருபதாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தொழில் ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரச உத்தியோகத்தர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
17 இலட்சம் அரச ஊழியர்கள் மிகவும் துரதிஷ்டவசமான தலைவிதியை எதிர்நோக்கியுள்ளதாக அந்த கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது வாழ்க்கைச் சுமை எகிறிவிட்டது. தண்ணீர், மின்சாரம், எரிபொருள், அத்தியாவசிய உணவு, மதிப்பீட்டு கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் கட்டுப்படியாகாத வகையில் உயர்ந்துள்ளது. இன்று எமது பிள்ளைகள் தமது கல்வியை ஒழுங்காகச் செய்ய முடியாமல் நிர்க்கதியாகியுள்ளனர். இனியும் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
வாழ்க்கைச் செலவு இவ்வளவு உயர்ந்தாலும் எட்டு வருடங்களில் ஐந்து சதம் கூட சம்பள உயர்வு இல்லை. ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார, சப்ரகமுவ ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் எம்முடன் நடத்திய கலந்துரையாடலில் இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் அரச சம்பளத்தை அதிகரிப்பதாக உறுதியளித்தனர்.
ஆனால், இதுவரை சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. வாக்குறுதியை மீறினர். இதன் மூலம் எமக்கு அளித்த வாக்குறுதி பலமுறை மீறப்பட்டது. இனியும் ஏமாற மாட்டோம். வரவிருக்கும் பட்ஜெட்டில் குறைந்தபட்சம் ரூ.20,000 சம்பள உயர்வு கிடைக்கும் என்பதே எங்களின் இறுதி நம்பிக்கை. அப்படி இல்லை என்றால் ஜனவரி முதல் தொழில் ரீதியாக கடுமையான முடிவுகளை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். இம்மாதம் 30ஆம் திகதி அதன் ஆரம்பத்தை குறிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பலமான போராட்டங்களை நடத்த எதிர்பார்க்கின்றோம்" என்றார்.