web log free
September 19, 2024

தடைக்குப் பின்னரும் 6969 வாகனங்கள் இறக்குமதி

2020 ஜூன் மாதம் இறக்குமதி தடை விதிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 6969 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2020ஆம் ஆண்டு முதல் 3809 மோட்டார் கார்கள் மற்றும் உதிரி வாகனங்கள், 2971 லொறிகள், பாரவூர்திகள், சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், அம்புலன்ஸ் உள்ளிட்ட 189 சிறப்பு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களில் பெரும்பாலானவை அதாவது 4348 வாகனங்கள் 2021 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது இறக்குமதி செய்யப்பட்டன.

அந்த ஆண்டில் 2,409 மோட்டார் கார்கள் மற்றும் பிற வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்க புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்த வாகனங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டவை என சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் தொடர்பில் சுங்கத்திற்கு தகவல் வழங்குவோருக்கு சம்பந்தப்பட்ட பொருட்களின் பெறுமதியில் மூன்றில் ஒரு பங்கு தொகை வழங்கப்படும் எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதியின் காரணமாக 2018 ஆம் ஆண்டில் சுங்கத்துறைக்கு 187 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைத்துள்ளதாகவும், இது அந்த வருடத்தில் சுங்கத்தின் மொத்த வருமானத்தில் 23 வீதமாகும் எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக, இந்த வருடம் சுங்கத்தின் மொத்த வருமானத்தில் 1.5 வீதம் வாகன வரியாக ஈட்டப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.