பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட எம்.பி.க்கள் குழு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தால், தமது உறுப்பினர்களாலும், ஒட்டுமொத்த மக்களாலும் கட்சி நிராகரிக்கப்படும் என கட்சித் தலைமைக்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
கட்சி மாநாடு மற்றும் வரவு செலவு திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்திலும் சமர்ப்பிக்கப்படும் போது பல சிக்கல் நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு முன்னர் இருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்சவைச் சுற்றியிருக்கும் இளம் எம்.பி.க்கள் குழுவும் பரிந்துரைத்துள்ளது.
எவ்வாறாயினும், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னர் ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு கட்சித் தலைமையிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த சந்திப்பில் எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.